
இயற்கை எனும்
வாலிபக் கலைஞனின்
தூரிகைச் சிதறல்கள்.
கார்மேகம் களவியலில் கருவுற்று
பெற்றெடுத்த
வெண்முத்துப் பிள்ளைகள்.
காரிருள் கறையை நீக்கி
வெண்மொட்டு மேகமாய்
மாற போடப்படும் ஒப்பனை.
வான்வெளியின் வர்ணஜாலம்.
வான்முகிலின் நிராகரிப்பு.
இணையா வானையும்-மண்ணையும்
இணைக்கும் நீர்க்கயிறு.
உன்னால் கிறுக்கப்பட்ட
கிறுக்கலாய்
மின்னல்.
உனக்கான எச்சரிக்கை
விளக்காய்
வானவில்.
வான் மேகத்தின் எச்சம்
செம்மண் தரையின் அமிர்தம்.
வான் அழுகின்ற போது
எங்கள் வாழ்க்கை குளிர்கிறது.
வடிகட்டி போகும் உனை விடுத்து
வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.
விரயமாகும் உனை விதைத்திட்டு
விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.
கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.
இயற்கையோடு இதயத்தை இணைக்க
உன்னில்
நித்தம் நனைய நினைக்கிறேன்.
ஆயிரம் ஆனந்தம் அளித்தாலும்
பல முகம் பிழையாக்கும் மழை.
இந்த நிறமற்ற மழை
பலருக்கும்
பிழையாகும் மழை.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...