சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.
கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.
விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.
எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.