RSS

Tag Archives: கண்ணீர்

“களவானி”

Kalavani

 

காலடிச் சத்தம் கேட்டு
கணவனைக் கண்டறியும்
களவானி.

கணிப்பொறியிலோ, கைபேசியிலோ
காலம் கழிக்கும்
கலைவாணி.

கடைக்கண் பார்வையிலேயே
கட்டளைகளை கடத்திடும்
காரியவாதி.

கதிரவன் உதித்தபின்பும்
கண்விழிக்க காரணம்தேடும்
கடமைக்காரி.

காய்கறி இல்லையென்றாலும்
கடுகிலே சமைத்திடும்
கைகாரி.

கனவையும்,கண்ணீரையும்
கவலையின்றி வெளிப்படுத்தும்
கன்னிகை.

காதலையும், காமத்தையும்
கணைகளாய் தாக்கம்
கவிதை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“பிரியாவிடை”

பிரியாவிடை

கருவறை வேறுபட்டாலும்
கல்லூரியில் ஒன்றானோம்.
பாலின பாகுபாடின்றி
பார்போற்ற பழகினோம்.
தனிவுடமை நீக்கி
பொதுவுடமை போதித்தோம்.
நட்பிலே உறவாடி
நாட்களை நலமாக்கினோம்.

கண்ணீர் துளிகளுடன்
காலத்தால் கலைகிறோம்.
கடமையை நிறைவேற்ற
நற்பாதையில் பயணிப்போம்.
உயிரால் இணைத்தபின்
உடலால் தானே பிரிகிறோம்.
அழியாத நினைவுகளுடன்
ஆன்மாவில் தொடருவோம்…

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“நாங்கள்”

கணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்
ஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்
தவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்
தண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்
வாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்
உதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்
கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்
இருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்
தொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்
திரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்
நழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்
மாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்
முதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்
இழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்
அறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்
இழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்
உண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“தன்னம்பிக்கை”

 

விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு
கருவிலேயே களம்வென்றவன் நீ
கவலைகளை கைக்குட்டையாய் எறி
மகிழ்ச்சியை மனதோடு சேர்
இறக்கத்திலும் இதிகாசம் படை

கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
கஷ்டத்திலும் கலகலப்பை மறவாதே
கோழைகளுடன் கைகோர்த்து விடாதே
பாறை என்று பயம் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு

நிழலுக்கு ஒப்பனையை நிறுத்து
நிஜத்துடன் போராடிப் பழகு
தோல்வி எதுவாயினும் ஏற்றுக்கொள்
தோள்களை வீரத்துடன் தட்டிக்கொள்
துணிவே துணை எனக்கொள்
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்

உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
கண்ணீர் துளிகளையும்
தண்ணீராய் மாற்றிடு

வெற்றியின் களிப்பு விடியும்வரை
தோல்வியின் மதிப்போ வீழும்வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்.

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

“இது காதல் அல்ல”

ஆசை வெட்கமறியாது போல,
வெட்கமின்றிக் கேட்டு விட்டேன்.
ஆசை பூர்த்தியானால் பூர்த்தியாளர்
நினைவலை வராது என நினைத்தாயோ?

உனைக் காணத் துடிக்கும் மனம்,
தீப்பிடித்து எரிகிறது தினம் தினம்.
அதைக் கொஞ்சிப் போவாயா? அல்லது கிள்ளிப் பார்ப்பாயா?
கருணை காட்டா விட்டாலும், காயப்படுத்திப் பார்க்காதே!

உயர் திணையாய் ஊர் சுற்றியவனை,
அஃறிணையாய் அடக்கி விட்டாய்.
வதைக்கும் மனம் பெண்களுக்கு உண்டு
என்றறிந்த உண்மை உன்னால் உணர்ந்தேன்.

சோகத்திற்கு நீ மொத்த சொந்தக்காரியடி
நீயிருந்த திசை என் புவி-ஈர்ப்பு விசையடி
மறக்கவோ, மறுக்கவோ முடியாதவள் நீயடி
கண்ணீர் கூட வெந்நீராய் சுடுகிறதடி.

உனக்காக காத்திருந்த அந்த நசிந்த நிமிடங்கள்,
வெறுக்க மனமில்லாமல் மறக்க முயற்சிக்கிறேன்
என் காதல் கூட இன்று கவலைக்கிடமானது
நீ கூறிய “இது காதல் அல்ல” என்ற வார்த்தையால்…

ஆசை வெட்கமறியாது போல,
வெட்கமின்றிக் கேட்டு விட்டேன்.
இது காதல் அல்ல.

 

குறிச்சொற்கள்: , , , , , ,

 
%d bloggers like this: