தாராளமயமாக்கல் தந்தது என்ன?
தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி கண்டு,
அடுத்தவீட்டின் தகவலை அறுத்து விட்டு,
அயல் நாட்டுக்கு அரைநொடியில் அழைக்கிறோம்.
வணிகமயமாக்கல் வளர்த்தது என்ன?
விவசாயம் வீழ்த்தப்பட்டு,
பணப்பயிரை பயிரிட்டு,
பட்டினிச் சாவுக்கு உரமிட்டோம்.
சந்தைப் பொருளாதாரம் சந்தித்தது என்ன?
கணிவுடன் கடன் அட்டை தந்து,
கட்ட வழியின்றி,
கடைத் தெருவில் நிறுத்தின.
சரி,
கொடுத்ததுதான் என்ன?
“பேராசை”.
அடுத்தவரை நேசிக்க நேரமின்றி
அடுக்குமாடி கட்ட யோசிக்கிறோம்.
ஆதாயம் தேடித்-தேடித் தான்
அன்பைக் கூட அளிக்கிறோம்.
உறவுகளில் உண்டான அன்பை
உயிரற்ற பொருட்களில் உண்டாக்கினோம்.
உறவுகள் நிறைந்திருந்த வீட்டில்
ஊமைப் பொருட்களை நிறைத்தோம்.
உணர்வுகளை உடைத்து விட்டு
உயிருள்ள பிணமாய் வாழ்கிறோம்.
கொடுத்ததை விட
இழந்தவை தான் அதிகம்.
இன்றைய தலைமுறையே
இப்படி இருண்டிருக்க,
அடுத்த தலைமுறையின்
அவலநிலை தான் “என்ன?”