காளமாடு ரண்டு பூட்டி
கலப்பைய அதுல மாட்டி
கழனிய ஏர் உழுதா,
பெரண்டு விழுற மண்ணப்
பாத்தா, கொள்ள அழகடி!
காலம் பார்த்து
வெதச்ச வெத,
மண்ணப் பொளந்து
மொளச்சு வந்தா,
மனசே குளுருதடி!
வேளா வேளைக்கு
தண்ணி பாச்சி,
உரத்தப் போட்டா,
தகப்ப மனசு
தன்னால வந்து சேருதடி!
ஒருநா வயலுக்கு போகலைனா,
மறுநா எனப் பாத்து
“ஏ நேத்து வந்து பாக்கல?”-னு
ஏதோ உரிமையில
கேள்வியா கேக்குதடி!
வளந்து, வயசுக்கு வந்த
பொம்பள மாதிரி
தலைய குனுஞ்சு நிக்கிற
அழக, பாக்கற பாக்கியம்
கெடச்சவ எவனடி!
சுமக்க முடியலைனு,
அறுத்து குமுச்சு
அதுகள வாரி
நெஞ்சோட அணச்சா,
கெடைக்கற சுகம்…