RSS

Tag Archives: உரிமை

“மணநாள் வாழ்த்து”

 

MananaalValthu

உணர்வினை மதித்து
உண்மையாய் வாழ்வோம்…
உரிமைகளுக்கு இடம்தந்து
உயிர்ப்போடு வாழ்வோம்…
வஞ்சகம் இல்லாமல்
வளமாய் வாழ்வோம்…
கவலைகளை கலைந்து
கைகோர்த்து வாழ்வோம்…
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்வோம்…
இலக்கண இல்லறமாய்
இயற்கையோடு வாழ்வோம்…
அளவோடு பெற்று
அறிவோடு வாழ்வோம்…
அகிலம் போற்ற
அன்பாய் வாழ்வோம்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

“அக்கா”

அக்கா

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச்  சுமந்தாயே

பக்கத்து  பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே

ஆசை  மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.

அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.

உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.

நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.

அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.

கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே

சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே

பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே

மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல்  உடன் பிறப்பாய்.

ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“காதல் முறிவு”

கதை கதையாய் பேசி
காதல் வளர்த்தோம்.

விடிய விடிய விழித்து
வாழ்வை விவாதித்தோம்.

நிழற்படங்களை பார்த்துக் கொண்டு
நிமிடங்களை நகர்த்தினோம்.

போட்டி போட்டுக் கொண்டு
பாசம் வைத்தோம்.

உறவுப் பெயர் வைத்து
உரிமையுடன் அழைத்தோம்.

உன் சொந்தங்களையும், என் சொந்தங்களையும்
நம் சொந்தங்களாக்கினோம்.

உனக்காகவே நானும், எனக்காகவே நீயும்
பிறந்தோம் என எண்ணினோம்.

எதிர்பாரமல் எதிர்ப்பு வந்ததும் 
எதிர்கொள்ளாமல் பிறிந்தோம்.

ஏதேதோ சொல்ல நினைத்து
எளிதாய் சொல்கிறேன்,

முடிந்தால் மன்னித்துவிடு
குறைந்தபட்சம் மறந்துவிடு.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“விவசாயி”

காளமாடு ரண்டு பூட்டி
கலப்பைய அதுல மாட்டி
கழனிய ஏர் உழுதா,
பெரண்டு விழுற மண்ணப்
பாத்தா, கொள்ள அழகடி!

காலம் பார்த்து
வெதச்ச வெத,
மண்ணப் பொளந்து
மொளச்சு வந்தா,
மனசே குளுருதடி!

வேளா வேளைக்கு
தண்ணி பாச்சி,
உரத்தப் போட்டா,
தகப்ப மனசு
தன்னால வந்து சேருதடி!

ஒருநா வயலுக்கு போகலைனா,
மறுநா எனப் பாத்து
“ஏ நேத்து வந்து பாக்கல?”-னு
ஏதோ உரிமையில
கேள்வியா கேக்குதடி!

வளந்து, வயசுக்கு வந்த
பொம்பள மாதிரி
தலைய குனுஞ்சு நிக்கிற
அழக, பாக்கற பாக்கியம்
கெடச்சவ எவனடி!

சுமக்க முடியலைனு,
அறுத்து குமுச்சு
அதுகள வாரி
நெஞ்சோட அணச்சா,
கெடைக்கற சுகம்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“மை”

சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,

வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,

சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,

உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட்ட வலிமை,
இறுகிய இனிமை,

மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,

விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?

சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,

எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“அகதி”

மரணித்துப்  போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“கவிதை”

 

 

 

 

 

 

 

 

 

 

சந்தித்த பொழுதுகளில்
சிந்திக்கவில்லை இவ்வாறு,
சந்திக்காத பொழுதுகளில்
சிந்திப்பேன் என்று.
உயிரினில் கலந்திட்ட
உண்மையும் தெரியவில்லை,
உரிமையுடன் உனைக்கேட்க
வீரமும் எனக்கில்லை.
தெளிவாய் தெரிந்தபின்
நிற்கிறேன் செய்வதறியாது.
சொல்லத்தான்  தவிக்கிறேன்
வார்த்தைகள் இன்றி,
ஆயினும் வடிக்கிறேன்
அனைத்தையும் கவிதையாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 
%d bloggers like this: