அம்மா வயிற்றில் கருவூன்ற
அளவற்ற ஆனந்தம் அடைந்திட்டாய்.
ஆண்மகன் என்னை ஈன்றெடுக்க
அன்றே மீசை முருக்கிட்டாய்.
அடிமேல் அடிஎடுத்து நான்வளர
அணு அணுவாய் ரசித்திட்டாய்.
அண்ட அகிலமும் எனைக்காண
அழகாய் ஆடை அணிவித்தாய்.
எட்டி உதைத்ததை எண்ணி
மார்தட்டி இறுமாப்பு கொண்டிட்டாய்.
ஆயிரம் சுமைகள் நீசுமந்து
அருமை மகனை வளர்த்திட்டாய்.
என் தேவை நிறைவேற்ற
உன் தேவை குறைத்திட்டாய்.
தடுமாறி தயங்கிய காலத்தில்
தோழனாய் தோள் கொடுத்திட்டாய்.
தடம்மாறி தவித்த தருணத்தில்
தட்டி தன்னம்பிக்கை தந்திட்டாய்.
தோல்வியில் துவண்டு அழுகையில்
தோள் சுமந்து நின்றிட்டாய்.
வேலையின்றி வெட்டியாய் சுற்றினாலும்
வேட்கையுடன் வெண்சாமரம் வீசிட்டாய்.
வானகம் விஞ்சி வாழ்ந்தாலும்
உத்தமனாய் உயிர்வாழக் கற்பித்தாய்.
என்பெயர் முன்னும் பின்னும்
முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்.
போலியில்லா உன்முகம் கண்டாலே
பொலிவுடன் பொதியினை சுமப்பேனே!