RSS

Tag Archives: அன்னை

“அக்கா”

அக்கா

மூத்தவளாய் நீ பிறந்து
முதுகிலே எனைச்  சுமந்தாயே

பக்கத்து  பள்ளிக்குகூட
கைப்பிடித்து செல்வாயே

ஆசை  மிட்டாய்-யை
பாதி கடிச்சு கொடுப்பாயே.

அடித்து வைத்து அழும் போது
அடிக்கமாட்டேனென்று பொய் சூளுரைப்பாயே.

உரிமையாய் சண்டைபோட்டு
உண்மையாய் உறவாடுவாயே.

நீ வாங்கிய சம்பளத்தை
நான் படிக்க பரிசளித்தாயே.

அடையாளம் தேடித்திரிந்த காலத்தில்
ஆறுதலாய் துணை நின்றாயே.

கண்கலங்கி நான் நின்றால்
கை கொடுக்க தவறாயே

சோதனை கண்ட நெஞ்சை
சாதனை காணச் செய்தாயே

பெற்றெடுத்த உன் பிள்ளைக்கு
பெருங்காவல் நான் என்றாயே

மறுஜென்மம் உண்டென்றால்
மறவாமல்  உடன் பிறப்பாய்.

ஆயிரம் உலகம் சொன்னாலும்
அடுத்த அன்னை நீதானே!

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“பெண் பார்த்தல்”

அதிகாலையில் எழுந்து
ஆறுமுறை குளித்து
பத்துமுறை பல்துலக்கி
பாதரசம்தேய உடைமாற்றி
சீராய் தலைசீவி
நல்ல சகுனம் பார்த்து
சொற்ப சொந்தங்களுடன்
பெண் பார்க்க சென்றேன்.

ஊரின் ஓரமாய் ஒத்தவீடு
பார்பதற்கு அழகான ஓட்டுவீடு
பாதையிலே காத்திருந்த தந்தை
முற்றத்திலே வரவேற்ற அன்னை
ஒளிந்து,ஒளிந்து பார்க்கும் தங்கை
ஓரக்கண்ணால் முறைக்கும் தம்பி
ஓயாமல் ஓடும் பாட்டி
தன்கதை சொல்லும் தாத்தா
ஓரமாய் ஒதுங்கிய பூனை
ஓவ்வொன்றும் தனிக் கவிதை.

என்கவிதை எங்கே? என்ற
ஏக்கமும், எதிர்பார்ப்புடனும் நான்
படபடப்பையும், பயத்தையும் வெளிக்காட்டாமல்
வீராப்பாய் அமர்ந்திருந்தேன்.
எங்கிருந்தோ ஒரு குரல்,
“ஏம்பா! பொண்ண கூப்பிடறது!”
சொன்னவன் தெய்வமானான்.

சின்ன இடை கொண்டு
அன்ன நடை நடந்து
தேநீருடன் தேவதை வந்தாள்.
பச்சை நிற பட்டுடுத்தி
கருப்பாய் கலையாய் இருந்தாள்.
எந்த நிறம் இருந்தென்ன?
எல்லா நிழலும் கருமைதானே!.

வெட்கம் வேடிக்கை பார்க்க
நாணம் என்ன விலை?
என்று கேட்டு விட்டு,
கள்ளப் பார்வையில் ஒரு
சின்னச் சிரிப்பை தந்தாய்.
அந்த ஒரு நிமிடப் பார்வை
ஓராயிரம் கதை சொன்னன.

மறக்க முடியாத தருணம்
யாரிடம் இல்லாத வசீகரம்
முன் எப்போதுமில்லாத உணர்வு
வாழ்வு முழுமையடைந்த நிம்மதி
எனைக்கென பிறந்தவளை,
எப்படியோ பார்த்துவிட்ட பரவசம்.

அன்று
நீ விட்டுச் சென்ற கனவுகளை
மட்டும்
பற்றிக் கொண்டு வாழப் பிடிக்கிறது.
நித்தம்,நித்தம் நீங்கா கனவுகளுடன்…
நான்,
தொலைந்து தான் போய்விட்டேன்.
தொடர்ந்து தேடுகிறேன்
தொலைந்ததை மீட்ட அல்ல
தொலைத்ததின் காரணம் காண…

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“என்னவள்”

 

 

 

 

 

 

 

அழுகின்ற குழந்தையை அரவணைக்கும்
அன்னையிடம் கேள் அன்பின் வலியை…

கானல் நீர் கண்டு களைப்படைந்த
பாகனிடம் கேள் தாகத்தின் தவிப்பை…

விடுமுறை விடப்பட்ட பள்ளி
பாலகனிடம் கேள் மகிழ்ச்சியின் மகிமையை…

கணநேரம் காத்திருக்கும்
காதலனைக் கேள் காலத்தின் கொடுமையை…

கண்ணுள் விழுந்த கனவை நனவாக்கும்
கலைஞனிடம் கேள் கனவின் களிப்பை…

ஏன் – உலகைப் படைத்த ஈசன், அவன்
மனைவியிடம் கேள் ஆசையின் ஆழத்தை…

இவையனைத்தும் என்னவள் எனக்குத் தந்தாள்.
எதிர்கொள்ள என்னுடன் துணை நின்றாள்.

 

குறிச்சொற்கள்: , , , ,

 
%d bloggers like this: