RSS

Monthly Archives: மே 2011

“மழை”

இயற்கை எனும்
வாலிபக் கலைஞனின்
தூரிகைச் சிதறல்கள்.

கார்மேகம் களவியலில் கருவுற்று
பெற்றெடுத்த
வெண்முத்துப் பிள்ளைகள்.

காரிருள் கறையை நீக்கி
வெண்மொட்டு மேகமாய்
மாற போடப்படும் ஒப்பனை.

வான்வெளியின் வர்ணஜாலம்.
வான்முகிலின் நிராகரிப்பு.

இணையா வானையும்-மண்ணையும்
இணைக்கும் நீர்க்கயிறு.

உன்னால் கிறுக்கப்பட்ட
கிறுக்கலாய்
மின்னல்.

உனக்கான எச்சரிக்கை
விளக்காய்
வானவில்.

வான் மேகத்தின் எச்சம்
செம்மண் தரையின் அமிர்தம்.

வான் அழுகின்ற போது
எங்கள் வாழ்க்கை குளிர்கிறது.

வடிகட்டி போகும் உனை விடுத்து
வழிமிஞ்சி நிற்பதை பங்கு பிரிக்கிறோம்.

விரயமாகும் உனை விதைத்திட்டு
விவசாயின் விதையை முத்தாய் மாற்றிடு.

கருவேலங் காட்டுக்கும் கஞ்சி காட்டுவான்
கண்ணீரையும் கரைக்கும் இந்த கயவன்.

இயற்கையோடு இதயத்தை இணைக்க
உன்னில்
நித்தம் நனைய நினைக்கிறேன்.

ஆயிரம் ஆனந்தம் அளித்தாலும்
பல முகம் பிழையாக்கும் மழை.

இந்த நிறமற்ற மழை
பலருக்கும்
பிழையாகும் மழை.

 

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

“அம்மா”

நீ தான் என் முதற் சொந்தம்
நீ சொல்லி தெரிந்தது பிற பந்தம்

பனி,குளிர்,மழை,வெயில் என நீ தாங்கி
கருவறையில் என்னைக் காத்தவளே

என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே

இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே

உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே

நான் பெய்த மூத்திரத்தில்
உன் முகம் துடைத்தவளே

உன் பெயர் ஊர் கேட்க
அம்மா எனச் சொன்னேனே

நீ கொடுத்த முத்தங்கள்
நெஞ்ஞாங்கூட்டில் இன்றும் இனிக்கிறதே

உன் மடி நான் சாய்ந்தால்
என் தலை முடி கோதியவளே

அப்பா அடிச்சா வலிக்குமுன்னு
வலிக்கா பாணத்தை தொடுத்தவளே

ஊரே எனை ஏசினாலும்
உனக்கு ராசா நான்தானே

நீ பாடு பட்டது
நான் வாங்க பட்டமானது

உன்னப் பத்திக் கவி பாட
இந்தக் காகிதமும் பத்தலையே

உன் நினைவை நான் முடிக்க
இந்தக் காலமும் மீளாதே

உன் கடனை நான் முறிக்க
என் எழு ஜென்மம் போதாதே

உன்னப் பத்தி நான் சொன்னா
உண்மை சுடுமடி, உதிரம் கொதிக்குமடி

உன தருமை நான் நினைச்சா
உள்ளம் கனக்குதடி, உயிரே வலிக்குதடி

திரைக் கடல் ஓடி திரவியம் தேட
உனைக் காப்பகம் சேர்த்தேனே

இந்தப் பாவம் நான் கழிக்க
மகளாய் மறுபிறவி நீ பிறப்பாயா?

உனை உச்சரிக்கும் போதெல்லாம்
உலகமே உன்னுள் அடங்குமடி

………… ” அம்மா “…………

சமர்ப்பணம் :
எனதருமை அம்மாவுக்கு,
அருமை மகனாய்,
அன்புப் பரிசாய்…

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“நானும் காதலிப்பேன்”

நானும் காதலிப்பேன்
காதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…

நானும் காதலிப்பேன்
கற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…

நானும் காதலிப்பேன்
காலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…

நானும் காதலிப்பேன்
கவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…

நானும் காதலிப்பேன்
கடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…

நானும் காதலிப்பேன்
கண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
நானும் காதலிப்பேன்
என்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…

 

குறிச்சொற்கள்: , , , , , ,

“அவள்”

பால் நிலா முகம்
மாயக் கயல்விழி கண்கள்
செந்தாமரை நிற உதடு
சிவந்த செவ்வான மேனி.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் அச்சமில்லாதவள்
நாணங்களில் ஏதும் மிச்சமில்லாதவள்
மாசற்ற மடமுடையவள்
பள்ளியாய் பயிர்ப்புடையவள்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு

எளிதாய் இதயம் புகுந்து
கனிவாய் கதை பேசி
இதமாய் இம்சை செய்து
சுகமாய் சுமை தந்தவள்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் சுவாசம் நுகர்ந்து என் சுவாசம் மறந்தேன்.
அவள் குரல் கேட்டு என் பேச்சை இழந்தேன்.
அவள் விரல்நுனி தொட என் வீரம் தொலைத்தேன்.
அவள் இதழ்ஈரம் பார்த்து என் நாவறண்டு நின்றேன்.
அவள் உள்ளம் நாதீண்ட என் முக்தி முடிப்பேன்.
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

அவள் அழகை ஐம்புலன் ரசிக்க
என் ஆறறிவை இழந்தேன்.
அவள் இதழ் திறந்து சொல்வாள் என
கிளை நில்லா இலையாய் நான்.
உள்ளம் தேடும் உண்மைக் காதலனாய்…
அவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.

“உண்மைக் காதலை மறக்க முடிவதில்லை.
மறக்கமுடிந்த காதல் உண்மையாய் இருப்பதில்லை.”

 

குறிச்சொற்கள்: , , , ,

 
%d bloggers like this: