அன்பென்ற இதயத்தில்
அழகாய் கோவில் கட்டி
அனுதினமும் நேசிப்பது அவளை அல்ல…
அவள் தந்து விட்டுச் சென்ற கனவுகளை…
“அவளை அல்ல”
“மை”
சொல்லுவது உண்மை,
இனமோ பெண்மை,
இறந்தது ஆண்மை,
வண்ணத்தின் ஏழ்மை,
உடையில் வெண்மை,
அழகின் பகைமை,
வயதோ இளமை,
உடலோ வளமை,
பட்டுப்போன செழுமை,
பாவமிந்த பதுமை,
பிரிக்கப்பட்ட பன்மை,
ஒதுக்கப்பட்ட ஒருமை,
சகுனத்தின் உவமை,
வலிகளின் உடமை,
காலத்தின் கொடுமை,
கனவுகளும் கருமை,
காயங்களின் முதுமை,
புறக்கணிப்பதா நேர்மை,
உடைபட்ட உரிமை,
பறிபோன தலைமை,
வாலிபத் தன்மை,
வாட்டும் தனிமை,
வீழ்ந்திட வலிமை,
இறுகிய இனிமை,
மரபுகளின் கயமை,
வாழ்க்கையே வெம்மை,
கொல்லுதடா வெறுமை,
உணர்விலா பொம்மை,
கிடைக்குமா தாய்மை,
மரணமே மகிமை,
விடியாத கிழமை,
அணியாத விழிமை,
இழந்திட்ட வன்மை,
விதவையெனும் அடிமை,
போதுமடா இம்மை,
வேண்டுமா மறுமை?
சமூகமோ பழமை,
இதுவே நிலமை,
எதற்கிந்த பெருமை?
போதுமிந்த பொறுமை,
களைவது கடமை,
அஞ்சுவது மடமை,
மறுமணமே மேன்மை,
எண்ணுவது எளிமை,
களம்வெல்வது கடுமை,
தயக்கங்கள் சிறுமை,
புரிந்திடுவோம் புதுமை,
வெல்லட்டும் வாய்மை,
மலரட்டும் மென்மை.
“நீயடி”
கண்ணியமாய் காதல் செய்தவள் நீயடி,
கொவ்வை இதழ்களால் கொஞ்சியவள் நீயடி,
அன்பிற்கு அகராதி தந்தவள் நீயடி,
காலம்மறந்து கதை பேசியவள் நீயடி,
கவிதைக்கு கரு தந்தவள் நீயடி,
காட்டாறுக்கு கரை போட்டவள் நீயடி,
பிழைகளை சரி செய்தவள் நீயடி,
இலக்கணமாய் இயங்கச் செய்தவள் நீயடி,
இறுகிய மனதை இளக்கியவள் நீயடி,
பாறைக்குள் நுழைந்த தேரையும் நீயடி,
பாய்ச்சலை பக்குவப் படுத்தியவள் நீயடி,
வாலிப-வானுக்குள் வந்த வசீகரநிலா நீயடி,
வில்லேந்திப் பார்வையில் வீழ்த்தியவள் நீயடி,
நித்திரையில் சொப்பனமாய் வாழ்ந்தவள் நீயடி,
கண் மூடினால் கனவாய் நீயடி,
மதி மயக்கிய மங்கையும் நீயடி,
விழிகளுக்கு வலி வழங்கியதும் நீயடி,
துடிக்கும் இதயத்தை தூக்கிலிட்டதும் நீயடி,
கல்லறையை முடிவுரையாய் முடித்ததும் நீயடி,
முடிந்த பின்பு துடிப்பதும் நீயடி.
“நாங்கள்”
கணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்
ஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்
தவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்
தண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்
வாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்
உதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்
கைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்
இருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்
தொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்
திரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்
நழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்
மாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்
முதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்
இழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்
அறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்
இழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்
உண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…?
“அகதி”
மரணித்துப் போயிருக்கலாம்
உயிர் பிடித்து
அகதியாய் வாழ்வதற்கு.
உரிமைக்காக போர் தொடுத்து
உள்ள
உறைவிடமும் பறிக்கப் பட்டோம்.
ரணங்களைக் கண்டு கண்டு
ரௌத்திரம் கற்றுக் கொண்டோம்.
கூரைகள் இல்ல விட்டாலும்
கூட்டுக் குடும்பமாய் வாழக்கற்றோம்.
முள்வேலிக்குள் முடக்கப்பட்ட
முடவர்களாய் முகம் காட்டுகிறோம்.
படுத்து உறங்க பாய்கள் வேண்டோம்
பதுங்கி இறக்க பாடை கேட்கிறோம்.
நாங்கள்
வதைக்கவா விதைக்கப்பட்டோம்.
அல்லது
வஞ்சிக்கவா வாழ்க்கைப்பட்டோம்.
இது என்ன
இயற்கையின் விதியா?
இல்லை அந்த
இறைவனின் பிழையா?

“தன்னம்பிக்கை”
விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு
கருவிலேயே களம்வென்றவன் நீ
கவலைகளை கைக்குட்டையாய் எறி
மகிழ்ச்சியை மனதோடு சேர்
இறக்கத்திலும் இதிகாசம் படை
கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
கஷ்டத்திலும் கலகலப்பை மறவாதே
கோழைகளுடன் கைகோர்த்து விடாதே
பாறை என்று பயம் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு
நிழலுக்கு ஒப்பனையை நிறுத்து
நிஜத்துடன் போராடிப் பழகு
தோல்வி எதுவாயினும் ஏற்றுக்கொள்
தோள்களை வீரத்துடன் தட்டிக்கொள்
துணிவே துணை எனக்கொள்
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்
உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
கண்ணீர் துளிகளையும்
தண்ணீராய் மாற்றிடு
வெற்றியின் களிப்பு விடியும்வரை
தோல்வியின் மதிப்போ வீழும்வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்.
“கல்லூரி”
கனவுகளின் தேசம்
கற்பனைகளின் ஒளிப்பதிவு
கடவுளின் உறைவிடம்
காதலின் கருவறை
கதையளக்கும் கலைக்கூடம்
கவலைகளின் மயானம்
வசந்தம் வீசும் வாலிபச்சோலை
தென்றல் தீண்டும் மலர்வனம்
போதி மரங்களின் கானகம்
பறவைகளின் கூடல்
புள்ளிமான்களின் புகலிடம்
புலிகள் வாழும் கூடாரம்
பட்டாம்பூச்சி பறக்கும் வயசு
பாடங்கள் பதியா மனசு
வரையறை இல்லா நட்பு
வண்ண மயில்களின் அணிவகுப்பு
ஏதுமறியாத மனங்கள்
எதிர்பார்பில்லா குணங்கள்
விழிகளின் விளையாட்டுக்கள்
தரைதவழும் விண்மீன்கள்
எச்சில் பண்டங்கள்
கருவாச்சி காவியங்கள்
கேலிக் கிண்டல்கள்
போலிச் சண்டைகள்
வீண் அரட்டைகள்
கண்ணைச் சொருகும் மதிய வகுப்புகள்
ஓரிரவில் முடிக்கப்படும் ஓராண்டுப் புத்தகங்கள்
ஒரே நிற ஆடை அணிந்த நாட்கள்
ஒவ்வொன்றும் ஒப்பில்லா உயிரோவியம்.





